உணவுப் பத்தியம்

நலவிழைவோர் கண்டிப்பாக

கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்:

  1. பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும்.
  2. தினமும் தலைக்கு சாதாரண (குளிர்) நீரில் குளிக்க வேண்டும். வெந்நீர் வைத்து குளிக்கக் கூடாது. தேவைப்படும்போது மட்டும் சிகைக்காய் அல்லது ஷாம்பு பயன்படுத்தலாம்.
  3. இரவுத் தூக்கம் முக்கியமானது. இரவில் கண் விழிக்கக் கூடாது.

உணவுப் பத்தியம்:

குறைந்தபட்சம் 7 நாட்கள், அதிகபட்சம் 14 நாட்கள்.

காலை உணவு:

காலையில் முதன்முறையாக பசி வந்தவுடன் அரிசிக் கஞ்சி சாப்பிடுவது சிறந்தது.

செய்முறை: புழுங்கல் சாப்பாட்டு அரிசி நொய் – தேவையான அளவு, வெந்தயம் – 1 சிட்டிகை, சீரகம் – 1 சிட்டிகை, மிளகு – 3, உப்பு – தேவைக்கேற்ப. அனைத்தையும் ஒன்றாக சேர்த்து 3 குவளை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். அரிசி நன்கு வெந்ததும் இறக்கி ஆறவைத்து பருகவும்.

புழுங்கல் சாப்பாட்டு அரிசிக்குப் பதிலாக சாமை, தினை, வரகு போன்ற சீர்தானியங்களையும் மாற்றி மாற்றி பயன்படுத்தலாம். ஆனால், பச்சை அரிசி அல்லது வேறு விதமான சீர்தானியங்களில் கஞ்சி வைத்து சாப்பிடக் கூடாது.

தொட்டுக்கொள்ள பிரண்டைத் துவையல், கருவேப்பிலைத் துவையல், கொத்துமல்லித் துவையல், புதினாத் துவையல், பருப்புத் துவையல், தேங்காய்த் துவையல், பொட்டுக் கடலைத் துவையல், நிலக்கடலைத் துவையல், வெங்காய வடகத் துவையல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்துக் கொள்ளலாம்.

பகல் உணவு:

சாப்பாடு: பகல் உணவாக சாப்பாடு சாப்பிடுவது சிறந்தது. சமையலில் பருப்பு மற்றும் புளி ஆகியவற்றின் அளவினைக் குறைத்துக் கொள்ள வேண்டும். உடல் தொந்தரவு தீவிரமாக இருந்தால், பருப்பு, புளி ஆகியவற்றை முற்றிலுமாகத் தவிர்த்துவிடலாம். புளி ரசத்திற்குப் பதிலாக, தக்காளி ரசம் வைத்துக் கொள்ளலாம். கீரை வகைகளை பகல் உணவில் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். காய்கறிகளில் செய்யப்படும் கூட்டு, பொரியல் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். மோர், தயிர், நெய் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.

அசைவ உணவுகள்: அசைவ வகைகளை இரசமாக (சூப்) செய்து, சாப்பாட்டில் சேர்த்து சாப்பிடலாம். அதில் போடப்பட்ட இறைச்சி வகைகளைச் சாப்பிடலாம். மீன் குழம்பாக இருந்தால் நீர்க்க (தண்ணீராக) வைத்துக் கொள்ளவும்.

(அல்லது)

பல சோறு (Variety Rice) வகைகள்: புலவு சோறு, மசாலா சேர்க்காத பிரியாணி, தேங்காய் சோறு, தக்காளி சோறு, கொத்து மல்லிச் சோறு, உளுந்து சோறு, புதினாச் சோறு போன்ற கலவைச் சோறுகளை பகல் உணவாக சாப்பிடலாம். இவ்வகையில், புளிச் சோறு, எலுமிச்சை சோறு ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்.

இரவு உணவு:

அரிசி உணவுகள் இரவுக்கு சிறந்தவை. அதிலும் ஆவியில் வேக வைக்கப்பட்ட உணவுகள் மிகவும் சிறப்பானவை. இட்லி, இடியப்பம், ஆப்பம் போன்ற ஆவியில் வேக வைக்கப்பட்ட அரிசி உணவுகளைச் சாப்பிடலாம். தோசை சாப்பிடுவதாக இருந்தால் எண்ணெய் மிகவும் குறைவாக பயன்படுத்தப்பட வேண்டும். பொங்கல் அல்லது மதிய சமைக்கப்பட்ட சாப்பாடு போன்றவற்றையும் சாப்பிடலாம்.

பூரி, பரோட்டா, சப்பாத்தி, பீட்ஸா, பர்கர் போன்றவற்றை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.


Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு