‘பொழுது’ தொடர் | அத்தியாயம்: 1 | காலத்தை உணர்தல்

Pozhuthu chapter 1 - Kalanidhi

காலம் என்பது என்ன? கடந்து சென்ற முந்தைய நொடியா? கடந்துகொண்டிருக்கும் இந்த நொடியா? அல்லது, இனிமேல்தான் வரப்போகும் ஒரு நேரத்தின் கற்பனை வடிவமா? அல்லது மூன்றும் சேர்ந்ததா?

காலம் என்பது என்ன? கடிகாரத்திற்குள் சுற்றிக் கொண்டேயிருக்கும் சின்ன முள்ளும் பெரிய முள்ளுமா? இல்லை, ஒன்றையொன்று துரத்திக் கொண்டேயிருக்கும் அவற்றின் தீராத விளையாட்டா?

ஒவ்வொரு நாளும் கிழித்து வீசப்படும் அல்லது கசக்கி எறியப்படும் நாட்காட்டி தாள்களில் காலம் ஒட்டியிருக்கிறதா?

நேற்று, இன்று, நாளை என்ற வரிசைக் கிரமத்தில் ஒவ்வொரு நாளும் காலம் நம்மைச் சந்திப்பதற்காகக் காத்திருக்கிறதா? காலமே காத்திருக்கிறது என்றால், அதற்கு கால விரயம் ஏற்படாதா?

நாழிகைக் கணக்குகள், மணிக் கணக்குகள், பொழுதுகள், நாட்கள், ஆண்டுகள், தசாப்தங்கள், சகாப்தங்கள், நூற்றாண்டுகள் என காலத்தைப் பகுத்து வைத்திருக்கிறார்கள். அப்படியானால், காலத்திற்கும் வயது உண்டா? மூப்பு உண்டா? மரணம் உண்டா?

காலத்திற்கு சோர்வு ஏற்படுமா? காலத்திற்கு ஓய்வு தேவைப்படுமா? காலத்திற்குப் பசிக்குமா? கோபம் வருமா?

காலமே பொழுதுதான் என்பதால், காலத்தின் பொழுதுபோக்கு என்னவாக இருக்கும்?

இப்படியாக, காலத்தைக் குறித்த எனது விசாரணைகள் முடிவற்று நீள்கின்றன.

காலத்தைக் குறித்த விசாரணைகள் ஒரு கட்டத்தில், என் ஆறறிவுகளை ஒவ்வொன்றாகக் கழற்றி எறியத் தொடங்குகின்றன. அறிவுகளற்ற, உணர்வு நிலையில் மையம் கொண்டிருக்கும் குழந்தைத்தனத்திற்கு என்னை மீண்டும் அழைத்துச் செல்கின்றன.

நான் ஒரு முடிவுக்கு வருகிறேன்.

காலத்தைக் குறித்து விசாரிப்பதை நிறுத்துகிறேன். காலத்தைக் குறித்துப் படிப்பதை நிறுத்துகிறேன். காலத்தை உணர்வது மட்டுமே காலத்தைப் புரிந்துகொள்வதற்கான ஆகச் சிறந்த வழி என்கிற முடிவுக்கு வருகிறேன்.

காலத்தை உணர்வது குறித்து உங்களுக்குப் புரியவைக்க எனக்கு ஒரு கதை தேவைப்படுகிறது.

ஓட்டப் பந்தய வீரன் ஒருவன் இருந்தான். மின்சாரத்தைவிடவும் வேகமாக ஓட நினைப்பவன். வாய்ப்பிருந்தால், இரண்டு கைகளையும் கழற்றிக் கொடுத்துவிட்டு, சிறகுகள் வாங்கிக் கொள்ளமுடியுமா என யோசிப்பவன்.

ஆடுகளத்திற்கு வந்துவிட்டால், ஐம்புலன்களையும் கால்களுக்கு மாற்றிவிடுவான். மனிதர்களோடு போட்டியிட்டுக் களைத்தவன். இனி சிறுத்தைகளோடும், மான்களோடும், பறவைகளோடும் போட்டியிட வேண்டும் என்று நினைத்துக் கொள்பவன். ஓட்டம், ஓட்டம். ஓட்டத்தைத் தவிர அவனுக்கு வேறு வாழ்க்கையில்லை.

ஒரு மாலை நேரத்தில் பயிற்சியை முடித்துவிட்டு, புல்வெளியில் அமர்ந்திருந்த அவனை யாரோ அழைப்பது போலிருந்தது. சுற்றிலும் திரும்பிப் பார்த்தான். பெயர் சொல்லி அழைக்கும் தூரத்தில் யாரும் இல்லை. யோசித்துக் கொண்டே காலணிகளை அவிழ்த்துக் கொண்டிருந்தபோது, மீண்டும் யாரோ அழைப்பது போலிருந்தது.

மறுபடியும் திரும்பிப் பார்த்தான். அருகில் யாருமில்லை. ஆனால், காலணிகள் கழற்றப்பட்ட காலில் யாரோ தொடுவதைப் போல ஓர் உணர்வு. வேகமாக காலை மடக்கிவிட்டு, தரையில் உற்றுப் பார்த்தான். அங்கே ஒரு தளிர், மண்ணுக்குள்ளிருந்து மெல்ல வெளியே தலைநீட்டிக் கொண்டிருந்தது.

இப்போது புரிந்துவிட்டது, தன்னை அழைத்தது அந்தத் தளிர்தான் என்பது. “நீயா கூப்பிட்டாய்?” என்றான் கண்களில் ஆச்சரியத்தைத் தேக்கியபடி.

“ஆமாம்” என்று தலையசைத்தது அது.

“உன்னால் பேச முடியுமா?” என்றான்.

“ஏன் முடியாது?” என்றது அந்தத் தளிர்.

“சரி, சொல். உனக்கு என்ன வேண்டும்?” என்றான்.

“என்னை ஏன் துன்புறுத்துகிறாய்?” என்றது தளிர்.

“நானா, உன்னையா? துன்புறுத்தினேனா? நான் ஓட வந்தவன். நீ முளைக்க வந்தவன். நான் என் வேலையைச் செய்கிறேன். நீ உன் வேலையைச் செய்கிறாய். இதில் நான் எப்போது உன்னைத் துன்புறுத்தினேன்…?” என்று கேட்டான் ஆச்சரியம் விலகாமல்.

“நீ உன் வேலையைச் செய்யும்போதெல்லாம், என் வேலையைச் செய்யவிடாமல் தடுக்கிறாய். ஓடுவதாகச் சொல்லிக் கொண்டு, ஒவ்வொரு நாளும் என் தலையில் மிதித்து, என்னைச் சேதப்படுத்திவிட்டுச் சென்றுவிடுகிறாய். என் சேதங்களைச் சரிசெய்துகொண்டு மீண்டும் தலைதூக்குவதற்கு எனக்குச் சில நாட்கள் ஆகிவிடுன்றன. இப்படியே இரண்டு மூன்று முறை ஆகிவிட்டது. இந்நேரம் நான் எவ்வளவோ வளர்ந்திருக்க வேண்டியவன். உன்னால் இப்படியே இருக்கிறேன்” என்றது கோபத்துடன்.

அவனுக்கு முதலில் அதிர்ச்சியும், பிறகு குற்றவுணர்வும் மேலிட்டது. “ஐய்யோ… என்னை மன்னித்துவிடு. தெரியாமல் அப்படி செய்துவிட்டேன்” என்றான்.

“மனிதர்களுக்கு இப்படி ஒரு வசதி இருக்கிறது. அடுத்தவருக்கு எவ்வளவு துன்பத்தைக் கொடுத்தாலும், மன்னித்துவிடு என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிடலாம்” என்று கடிந்துகொண்டது அந்த தளிர்.
“நான் அப்படிச் சொல்லவில்லை. உண்மையிலேயே மன்னிப்பு கேட்கிறேன். என்னை மன்னித்துவிடு…” என்றான் அவன்.

“நீ எளிதாகச் சொல்லிவிடுவாய். ஆனால், மண்ணை முட்டித் துளைத்து, முளைத்து, தலைதூக்கி, துளித் துளியாய், ஒவ்வோர் இலையாய் வளர்த்தெடுத்து, எழுந்து நிற்கும் வாழ்க்கை என்னுடையது. உங்களால் எளிதாக சேதப்படுத்தி அழித்துவிட முடிகிறது” என்று வருத்தப்பட்டது அந்தத் தளிர்.

“ஆனால், உன்னால்தான் உடனுக்குடனே வளர முடிகிறதே. இன்றைக்கு உன் தலையைக் கிள்ளி எறிந்தாலும், நாளைக்கே நீ வளர்த்துக் கொள்ள முடிகிறதே…? மனிதர்களுக்குத்தான் அந்தத் திறமை இல்லை. ஒரு கை வெட்டப்பட்டுவிட்டாலும், ஒரு விரலை இழந்துவிட்டாலும், மனிதர்களால் மீண்டும் அதனை வளர்த்தெடுக்க முடியாது” என்றான்.

“இன்றைக்கு சேதப்படுத்தினால், நாளைக்கே வளர்த்துக் கொள்ளலாம் என்று எளிதாகச் சொல்லிவிட்டாய். உனக்கு காலத்தின் அருமை தெரியுமா? காலத்தின் அருமை தெரிந்தால், இப்படிப் பேசமாட்டாய்…” என்றது தளிர்.
“எனக்கும் காலத்தின் அருமை தெரியும் நான் பயிற்சி எடுக்கும் ஒவ்வொரு நாளும் எனக்கு முக்கியமானது… ஒருநாள் ஓடாவிட்டாலும் எனக்கு தூக்கம் வராது…” என்றான் அவன்.

“நீ பொய் சொல்கிறாய். உண்மையில் உனக்கு காலத்தின் அருமை தெரியாது” என்று அடித்துச் சொன்னது தளிர்.
“எப்படிச் சொல்கிறாய்?” என்று கோபப்பட்டான் அவன்.

தளிர் சொன்னது, “ஓடிக் கொண்டே இருப்பவர்களால் காலத்தை உணர முடியாது. காலத்தை உணர முடியாதவர்களுக்கு காலத்தின் அருமை தெரியாது. உனக்குத் தூக்கம் வராவிட்டாலும் பரவாயில்லை. ஒரு நாள் ஓடாமல் இருந்து பார். உன்னால் காலத்தை உணர முடிந்தால், அப்போது சொல். ஒப்புக் கொள்கிறேன்”.

ஒருநாள் ஓடாதிருப்பதற்கு அவன் ஒப்புக் கொண்டான்.

அடுத்த நாள் காலையில் எழுந்ததும், நேராக மைதானத்திற்குச் சென்றுவிட்டான். ஓடவில்லை. எது நடந்தாலும், என்ன நேர்ந்தாலும் இன்றைக்கு ஓடவே கூடாது என்று உட்கார்ந்துவிட்டான். உடன் ஓடுவோர், ஓடவில்லையா என்று கேட்டார்கள். ஏதோ காரணம் சொன்னான். பயிற்சியாளர் வந்து கேட்டார். உடல்நிலை சரியில்லை என்று சொன்னான்.
மைதானத்திற்கு நடுவில் பசுமைத் தீவாய்க் காட்சியளித்த, பனித்துளிகள் போர்த்திக் கிடந்த புல்வெளியில் அமர்ந்திருந்தான். அவனைச் சுற்றிக் கொண்டு மைதானத்தின் ஓரப் பகுதியில் பலரும் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

வெயில் ஏற ஏற, பனித்துளிகள் காய ஆரம்பித்தன. புல்வெளியைப் போர்த்தியிருந்த பனிப் போர்வையை கதிரவன் எடுத்து மடித்து, தனது கக்கத்தில் வைத்துக் கொண்டு போய்விட்டதைப் போல உணர்ந்தான்.

மரத்தடிக்கு மாறினான். பெரிய மாமரம் அது. மரத்தின் நிழலைப் பார்த்துக் கொண்டே இருந்தான். மரத்தின் நிழலில் கலந்துவிட்ட தன்னுடைய எங்கே இருக்கிறது எனத் தேடிப் பார்த்தான். கண்டுபிடிக்க முடியவில்லை.

மரத்தின் நிழல் மட்டும் நகர்ந்துகொண்டே இருந்தது. மரத்தின் நிழற்குடையை கதிரவன் நகர்த்திக்கொண்டே போகிறான் போலும் என நினைத்துக் கொண்டான். நூறு மீட்டர், இருநூறு மீட்டர் தூரங்களை நொடிக் கணக்குகளில் கடந்து சென்றவனுக்கு, மில்லி மீட்டர் மில்லி மீட்டராய் நிழல் நகர்ந்து செல்வதை கவனித்தது, மாபெரும் அனுபவமாய் இருந்தது.

மரத்தினடியில் வெக்கை அதிகமாகியிருந்தது. பார்வையாளர் மாடத்திற்கு மாறினான். ஓர் இருக்கையில் தனிமையில் அமர்ந்தான். விரித்துப் போட்ட மைதானம், அவனது கண் முன்னே வெய்யிலில் குளித்துக் கொண்டிருந்தது. சில இடங்களில் கானல் நீர் தகித்துக் கொண்டிருந்தது. மாமரத்திலிருந்து உதிர்ந்த இலையொன்று வெயிலில் கிடந்தது. சற்று முன்னர் பார்த்த பச்சை இப்போது அந்த இலையிலில்லை.

கண்களை மூடிக் கொண்டான். பூமி சுற்றிக் கொண்டிருக்கும் ஓசை காதுகளில் கேட்பதைப் போல உணர்ந்தான். திடுக்கிட்டு கண்களைத் திறந்தான். கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் கண்களை மூடினான். எங்கோ ஒரு காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரியும் சத்தம் காதுகளில் கேட்டது. அதன் வெப்பம் கண்களில் தகித்தது. மீண்டும் திடுக்கிட்டு கண்களைத் திறந்தான்.

தண்ணீர் குடித்தான். முகங்கழுவினான். தேநீர் குடித்தான்.

வெயில் தாழ்ந்ததும் மெதுவாக நடந்து மைதானத்தை ஒருமுறை சுற்றி வந்தான். இவ்வளவு மெதுவாக அவன் நடந்ததேயில்லை. இவ்வளவு மெதுவாக தன்னால் நடக்க முடியும் என்பதை அதற்குமுன் அவன் அறிந்ததேயில்லை.
மைதானத்திற்கு நடுவிலிருந்த அந்தப் புல்வெளிக்கு மீண்டும் வந்தமர்ந்தான்.

அப்போது கதிரவன் மேற்கில் இறங்கத் தொடங்கி இருந்தான். தன்னைச் சுற்றி மைதானத்தின் ஓரத்தில் நிறையப் பேர் ஓடிக் கொண்டிருப்பதை அமைதியாகப் பார்த்துக் கொண்டே இருந்தான். ஓடுவோரின் நிழல்கள் நீண்டுகொண்டே செல்வதை கவனித்தான். ஒருவன் போனமுறை ஓடியபோது இவ்வளவு நீளமாய் நிழலில்லையே? இப்போது ஓடும்போது நிழல் இவ்வளவு நீண்டிருக்கிறதே? புறக்கண்களால் நிழலை அளந்து, மனக் கண்களில் வியப்பு கூட்டினான்.

இருள் கவியத் தொடங்கியது. விளக்குகள் ஒவ்வொன்றாய் அணைக்கப்பட்டன. வாகனங்களின் ஓசைகள் படிப்படியாகக் குறையத் தொடங்கின.

எங்கும் அமைதி. நிசப்தத்தின் புட்டிக்குள் அடைக்கப்பட்டதைப் போல உணர்ந்தான். மெல்ல கவனித்தவன், அதுவொன்றும் பூரண நிசப்தம் இல்லை என்பதைப் புரிந்துகொண்டான். சில பூச்சிகள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. வண்டுகள் பாடிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு பூச்சிக்கும் ஒவ்வொரு ரீங்காரம். ஒவ்வொரு வண்டுக்கும் ஒவ்வொரு தாளம். இவற்றில் எது பாட்டு? எது எசப்பாட்டு? பிரித்தறிந்து புரிந்துகொள்ள முடியவில்லை.

வானைப் பார்த்தபடி படுத்துக் கிடந்தான்.

இருட்டுக் கரும்பலகையில் ஒரு வால் நட்சத்திரம் வெள்ளை சாக்பீசால் கோடு போட்டுக் கொண்டிருந்தது. சிவப்புக் கண்களை மினுக்கியபடி ஒரு விமான கடந்து போனது. விமானத்தின் வேகம் அதிகமா? வால் நட்சத்திரத்தின் வேகம் அதிகமா? விமானத்தின் தூரம் எவ்வளவு இருக்கும்? வால் நட்சத்திரத்தின் தூரம் எவ்வளவு இருக்கும்? மனசுக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தான்.

அப்படியே தூங்கிப்போனான்.

காலையில் எழுந்ததும், நேற்றைய தினம் தன்னிடம் கங்கணம் கட்டிய தளிரிடம் வந்தான்.

“நான் காலத்தை உணர்ந்துகொண்டேன். காலத்தின் அருமையைப் புரிந்துகொண்டேன். நான் உன்னிடம் மனதார மன்னிப்பு கேட்கிறேன். உன்னுடைய பொன்னான காலத்தை நான் வீணாக்கி இருக்கிறேன். உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்? உனக்குப் பாதுகாப்பாக உன்னைச் சுற்றி கம்பி வேலி அமைக்க ஏற்பாடு செய்யட்டுமா?” என்றான்.
அதற்கு அந்தத் தளிர், “நீ காலத்தை உணர்ந்துகொண்டதே போதும். என் பிறவிக்கான பயன்களில் ஒன்றை அடைந்துவிட்டேன். எனக்கென நீ எதுவும் செய்ய வேண்டாம். என் வாழ்க்கையை நான் பார்த்துக் கொள்கிறேன். உன் வாழ்க்கையை நீ பார்த்துக் கொள்” என்றது.

காலத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், காலத்தை உணர வேண்டும். காலத்தை உணர வேண்டுமானால், ஓடுவதை நிறுத்த வேண்டும். உடலால் ஓடுவதை மட்டுமல்ல, உள்ளத்தால் ஓடிக் கொண்டே இருப்பதையும் நிறுத்த வேண்டும். உள்நோக்கித் திரும்ப வேண்டும்.

O


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு