‘பொழுது’ தொடர் | அத்தியாயம்: 2 | காலத்தின் பேரழகு

Pozhuthu chapter 2 - Kalanidhi

ஒருமுறை ஆற்றலோடு விளையாடிக் கொண்டிருக்கும்போது, “அப்பா, நாம் பெரிய கோயிலுக்கு கோடைக் காலத்தில் போய்விட்டு, பனிக் காலத்தில் திரும்பி வருகிறோம்…” என்று சொன்னான்.

குழந்தைகளின் வார்த்தைகளில் கடவுளின் வாசகங்கள் ஒளிந்திருப்பதை நான் அடிக்கடி உணர்ந்திருக்கிறேன். ஏனென்றால், ஒரு கருத்தைச் சொல்வதற்கான வார்த்தைகளை அறிவைக் கொண்டு குழந்தைகள் தேர்ந்தெடுப்பதில்லை; மனதில் என்ன தோன்றுகிறதோ, அதையே வார்த்தைகளாக்கி பேசி விடுகிறார்கள்.

‘பெரிய கோயிலுக்கு கோடைக் காலத்தில் போய்விட்டு, பனிக் காலத்தில் திரும்பி வருகிறோம்’ என்று அவன் சொன்னதைப் பற்றி யோசித்துக் கொண்டே, அந்த வார்த்தைகளின் மீது நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்தேன்.

மழைக் காலத்தில் சொட்ட சொட்ட நனைந்தபடி… கோடைக் காலத்தில் உச்சந்தலையும் உள்ளங்காலும் கொதித்தபடி… குளிர் காலத்தில் நரம்புகள் எல்லாம் நடுங்கியபடி… என எல்லா காலத்திலும் நானும் அவனும் பெரிய கோயிலுக்குச் சென்று வந்திருக்கிறோம். ஆனால், ஒரு காலத்தில் சென்றுவிட்டு, இன்னொரு காலத்தில் திரும்பியதாகச் சொன்னது எனக்கு விநோதமாக இருந்தது; வியப்பை ஏற்படுத்தியது.

கோயிலில் நாள்தோறும் ஆறு கால பூசைகள் நடைபெறுவதுண்டு. அவையோ வேறுவிதமான காலங்கள்.

காலை 6 மணிக்கு வைகறைக் காப்பு, முற்பகல் 10.30 மணிக்கு காலசந்திக் காப்பு, பகல் 12 மணிக்கு உச்சிகாலக் காப்பு, மாலை 5 மணிக்கு திருவந்திக் காப்பு, இரவு 8 மணிக்கு இரண்டாங்காலக் காப்பு, இரவு 9 மணிக்கு அர்த்தசாமக் காப்பு என ஆறுகால பூசைகள் நடைபெறும். மகா சிவராத்திரியன்று மட்டும் இந்த ஆறு கால பூசைகளும் இரவிலும் செய்யப்பட்டு அதிகாலையில் கோயில் பூட்டப்படும். இதெல்லாம் அவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை.

ஒரு புதிரை அவிழ்க்கும் தீவிரத்தோடு நீண்ட நேரம் யோசித்தபிறகும் ஒன்றும் தோன்றவில்லை. பிறகு அவனிடமே விளக்கம் கேட்டேன். “நாம் வீட்டிலிருந்து பெரிய கோயிலுக்கு மாலை நேரத்தில் கிளம்புகிறோம். அப்போது வெயில் அடிக்கிறது… அதைத்தான் கோடைக் காலம் என்று சொன்னேன். பெரிய கோயிலில் நீண்ட நேரம் விளையாடிவிட்டு, கருவூரார் சன்னதி, ஈசானர் சன்னதி, நடராஜர் சன்னதி என பல இடங்களில் உட்கார்ந்துவிட்டு, பிறகு வீட்டிற்குத் திரும்பும்போது இருட்டிவிடுகிறது… அப்போது குளிர் அடிக்கிறது. அதைத்தான் பனிக் காலம் என்று சொன்னேன்” என்று விளக்கம் கொடுத்தான்.

வெயில் அடிக்கும் காலத்தைக் கோடைக் காலம் என்று வைத்துக் கொண்டால், குளிர் அடிக்கும் காலத்தைப் பனிக் காலம் என்று வைத்துக் கொண்டால், அவன் சொன்ன வாக்கியத்தில் பிழையொன்றும் இல்லைதான்.

ஆனால், எது கோடைக்காலம், எது பனிக்காலம் என்பதுதான் இப்போது அவனுக்கும் எனக்குமான பிரச்சினை.

காலத்தை வகைப்படுத்துதலில் தமிழ் மரபைப்போல வேறு யாரும் இவ்வளவு ஆழ்ந்த புரிதலைக் கொண்டிருந்தார்களா எனத் தெரியவில்லை.

கார்காலம் (ஆவணி, புரட்டாசி), கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை), முன்பனிக்காலம் (மார்கழி, தை), பின்பனிக்காலம் (மாசி, பங்குனி), இளவேனில் (சித்திரை, வைகாசி), முதுவேனில் (ஆனி, ஆடி) என காலத்தை வகைப்படுத்துகிறது தமிழ் மரபு. இவை அனைத்தும் பெரும்பொழுது எனப்படுகின்றன.

இவற்றை இன்னும் சுருக்கி, ஒருநாள் பொழுதை காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை எனப் பகுத்து, அதனை சிறுபொழுது என்கிறது தமிழ் மரபு. இதில் யாமத்தைப் பொருத்தவரை, முதல் யாமம், இரண்டாம் யாமம், மூன்றாம் யாமம் என சிறு பகுப்புகளும் உண்டு. இந்த யாமம் என்பதுதான் பேச்சு வழக்கில் சாமம் என்றாகிப் போனது. யாமத்தில் அதாவது, இரவில் கூவும் கோழி சாமக் கோழி என அழைக்கப்படுகிறது.

குழந்தைகளின் உலகத்திற்குள் புகுந்து, இந்தப் பொழுதுகளை அவர்கள் எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என அறிந்துகொள்வதற்கு எனக்கு ஆசையாக இருக்கிறது. நமக்குப் பெரும்பொழுதுகளாகத் தெரிவது குழந்தைகளுக்குச் சிறுபொழுதுகளாகத் தெரியுமோ? அப்படியானால், நமக்கு சிறுபொழுதுகளாகத் தெரிவது குழந்தைகளுக்கு என்னவாகத் தெரியும்?

குழந்தைகள் அறிவால் வாழாமல் உயிரால் வாழ்வதால்தான், நுண்ணுணர்வுகளைக் கொண்டாடுகிறார்களோ?

கூதிர்காலம் என்றால் அடைமழையும், இளவேனில் என்றால் கடுங்கோடையும் நம் மனக்கண்ணில் வந்துபோகுமே… குழந்தைகளின் மனதில் அந்தச் சித்திரம் எப்படி இருக்கும்? அந்தந்த காலத்து விளையாட்டுகளோடும், அந்தந்த காலத்து தின்பண்டங்களோடும், அந்தந்த காலத்துத் திருவிழாக்களோடும் காலங்களை மனச்சித்திரத்தில் வரைந்து வைத்திருப்பார்களோ?

குழந்தைகளின் மனதுக்குள் நின்றபடி, காலத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன்.

பெரும்பொழுதுகளைச் சிறுபொழுதுகளாகப் பகுத்ததைப் போல, சிறுபொழுதுகளை சின்னஞ்சிறு பொழுதுகளாக, சின்னஞ்சிறு பொழுதுகளை மீச்சிறு பொழுதுகளாகப் பகுத்துக் கொண்டே போனால் என்ன கிடைக்கும்? ஒரு மலையை உடைத்துக் கொண்டே போனால், இறுதியில் மணல் கிடைக்கலாம். ஒரு பெருங்காலத்தை உடைத்துக் கொண்டே போனால் இறுதியில் என்ன கிடைக்கும்?

கேள்விகளே என் சாவிகள் ஆகின்றன.

காலத்தின் வகைப்பாட்டில் நுண்காலம் என்று ஒன்று உண்டு. ஆயுட்காலம் என்கிற கருத்து நுண்காலத்தைப் புரிந்துகொள்ள உதவும்.

ஆமைகளின் ஆயுட்காலத்தைவிட மனிதர்களின் ஆயுட்காலம் குறைவு. மனிதர்களின் ஆயுட்காலத்தைவிட நாய்களின் ஆயுட்காலம் குறைவு. நாய்களின் ஆயுட்காலத்தைவிட பட்டாம்பூச்சியின் ஆயுட்காலம் மிக மிகக் குறைவு. பட்டாம்பூச்சியின் ஆயுட்காலத்தைவிட மின்மினிப் பூச்சிகளின் ஆயுட்காலம் குறைவு.

நமது உடம்பில் இருக்கும் கோடி கோடி நுண்ணுயிரிகளின் ஆயுட்காலமானது ஒரு நொடியை ஆயிரத்தால் பகுத்தால் கிடைக்கும் காலத்தைவிடவும் குறைவானது. எனவே உயிர்களின் ஆயுட்காலத்தைப் புரிந்துகொண்டுவிட்டால், நீங்கள் நுண்காலத்தை உணர்ந்துகொள்ள முடியும்.

மனிதர்களைப் பொருத்தவரை ஒரு மலரின் காலம் என்பது மிகச் சிறியது. மலர்ந்தது, காய்ந்தது, உதிர்ந்தது என மனிதர்கள் ஒரு மலரின் வாழ்வைக் கடந்துபோகும் வேகம் பரிதாபத்திற்குரியது. ஆனால் ஒரு மலருக்குத்தான் தெரியும் அதன் வாழ்வு எத்தனைப் பெரியது என்று.

பெண்களுக்கு ஏழு பருவங்கள் இருப்பதைப் போல, மலர்களுக்கும் ஏழு பருவங்கள் இருக்கின்றன. அதில் உட்பிரிவுகளும் உண்டு.

மலர்களின் முதல் பருவம் – நனை. காம்புகள் மட்டும் வளர்ந்த நிலை இது. இரண்டாவது பருவம் – அரும்பு. இதழ்கள் குவிந்து மிகச் சிறியதாக இருக்கும் நிலை இது. மூன்றாவது பருவம் – முகை. அரும்பு பெரிதாகி மொட்டு நிலையைக் கடந்து முகிழ்க்கும் நிலை இது. நான்காவது பருவம் – போது. இது முகை நிலையின் இரண்டாம் கட்டம் என்று வைத்துக் கொள்ளலாம். ஐந்தாவது பருவம் – மலர். இது மலரானது கொஞ்சமாக பூத்திருக்கும் நிலை. ஆறாவது பருவம் – அலர். இது நன்கு பூத்து, வாசம் வீசி வரவேற்கும் நிலை. ஏழாவது பருவம் – வீ. மலரானது வாடி வீழுகின்ற நிலையை எட்டுவது. இதற்கு அடுத்த பருவம் செம்மல் எனப்படும். இது வாடிய பூவானது சருகாகிப் போகும் நிலை.

மனிதர்களைப் பொருத்தவரை, மலர்கள் பூத்திருந்தால் ரசிக்கிறார்கள். மணம் வீசினால், நுகர்கிறார்கள். மனிதர்களின் கண்களுக்கும் நாசிகளுக்குமான இடைப்பட்ட தூரத்தில் மலர்களின் பெருவாழ்வு பூத்துக் குலுங்குகிறது.

மலர்களின் காலம் மலருக்கு மலர் வேறுபடக் கூடியது. பறித்த சில மணி நேரங்களில் வாடிவிடுகிறது அந்திமந்தாரை. முல்லைப் பூவோ பறிக்கப்பட்ட நாளின் இரவு வரை காத்திருக்கிறது. இரண்டு நாளைக்கு வாடுவதில்லை சாமந்திப் பூவும், சிறுபீழைப் பூவும். வாடினாலும் வாசமிழப்பதில்லை மல்லிகைப்பூ.

மலர்களின் காலம் வகைக்கு வகை வேறுபடக்கூடியது. தமிழ் மரபில் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ என நான்கு வகையாக மலர்கள் வகைபடுத்தப்படுகின்றன. கோட்டுப்பூ என்றால், மரங்களில் பூப்பவை. நாகலிங்கம், மந்தாரை, மகிழம்பூ, கொன்றை, சண்பகம், பவழமல்லி போன்றவை கோட்டுப்பூ வகைகளில் சில.

படரும் கொடிகளில் பூக்கக்கூடியவை கொடிப்பூக்கள். காந்தள், மல்லிகை, முல்லை, பிச்சி போன்றவை கொடிப்பூக்களில் சில. தாமரை, ஆம்பல், குவளை போன்றவை நீர்ப்பூ வகைகளில் சில. செம்பருத்தி, சாமந்தி, ஊமத்தை, தும்பை, நந்தியாவத்தை போன்றவை நிலப்பூ வகைகளில் சில.

பூக்களின் வாழ்க்கையைப் பொருத்தவரை எது நுண்காலம், எது பெருங்காலம்? ஒரு மலர் அரும்பு விடுவதற்குள், இன்னொரு மலர் வீ பருவத்தையடைந்து வீழ்ந்து விடுகிறது. அந்திமந்தாரை மலர்வதற்குள்ளாக, மல்லிகைப் பூக்கள் பறிக்கப்பட்டு, நாரில் கட்டப்பட்டு, கூந்தலில் குடியேறிவிடுகிறது.

இப்பிரபஞ்சத்தில் ஓர் உயிருக்கு நுண்காலமாக இருப்பது, இன்னோர் உயிருக்கு பெருங்காலமாக இருக்கிறது. ஒன்றுக்கு பெருங்காலமாகத் தெரிவது, மற்றொன்றுக்கு நுண்காலமாகத் தெரிகிறது. காலத்தின் பேரழகே இதுதான்.

எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக மலைகள் நிலைத்து நின்று கொண்டிருக்கின்றன? எத்தனை ஆயிரம் ஆண்டுகளாகக் கடல்கள் நிறைந்து ததும்புகின்றன? எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக மழை பொழிந்துகொண்டே இருக்கிறது? எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக காற்று வீசிக் கொண்டே இருக்கிறது? எத்தனை ஆயிரம் ஆண்டுகளாகக் கதிரவன் தனது ஒளிக் கிரணங்களால், பூமியை குளிப்பாட்டிக் கொண்டே இருக்கிறான்? எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக நிலவு ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது? எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக விண்மீன்கள் மினுக்கிக் கொண்டே இருக்கின்றன?

இவை எல்லாவற்றின் பார்வையிலும் மனிதர்களின் ஆயுட்காலம் எவ்வளவு நுண்ணியதாக இருக்கக்கூடும்? பூமியின் பார்வையில் மலைகளின், கடல்களின், மழை மேகங்களின் ஆயுட்காலம் எவ்வளவு நுண்ணியதாக இருக்கக்கூடும்? கதிரவனின் பார்வையில் எரிமலைகளின் ஆயுட்காலம் எத்தகையதாக இருக்கக்கூடும்?

இன்னும் கொஞ்சம் பெரிதாக யோசித்தால், பிரபஞ்சத்தின் பார்வையில் பூமியின் ஆயுட்காலம் எவ்வளவு நுண்ணியதாக இருக்கக்கூடும்?

திருவையாறு ஐயாறப்பர் கோயிலோடு இணைந்த அறம் வளர்த்த நாயகி கோயில் மிகவும் அழகானது. சிற்பங்களின் மூக்கு நுனியும், முலை நுனியும் கூர் மழுங்காத புத்தம் புதிய கோயில் அது. அக்கோயில் குறித்து வரலாற்று ஆய்வாளர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, ‘சமீபத்தில்’ கட்டப்பட்ட கோயில்தான் – நூறு அல்லது நூற்றைம்பது ஆண்டுகள் இருக்கும் என்றார். கோயில்களைப் பொருத்தவரை நூறு ஆண்டுகள் என்பதே நமக்கு அண்மைக் காலம்தான்.

தஞ்சாவூர் பெரிய கோயில் கி.பி. 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அதன் கட்டுமானப் பணிகள் கி.பி. 1003ஆம் ஆண்டில் தொடங்கி, கி.பி. 1010ஆம் ஆண்டில் நிறைவடைந்துள்ளது. இன்றைக்கு கிட்டத்தட்ட ஆயிரத்துப் பத்து ஆண்டுகளாகிவிட்ட தஞ்சைப் பெரிய கோயிலை, தில்லை நடராசர் கோயிலோடு ஒப்பிடும்போது தஞ்சைக் கோயில் ‘புதியது’தான்.

தஞ்சைப் பெரிய நாயகியைக் காட்டிலும், திருவையாறு அறம் வளர்த்த நாயகி இளையவள்தான்.

நுண்காலமும் பெருங்காலமும் இடத்தால், பொருளால், உயிரால் மாறிக் கொண்டே இருக்கின்றன.

நுண்காலத்தில் பிறந்து, நுண்காலத்திலேயே வாழ்ந்து, நுண்காலத்திலேயே மறைந்து போகும் உயிர்களுக்குப் பெருங்காலத்தைக் குறித்த கவலையில்லை. பெருங்காலம் என்று ஒன்று இருப்பதே அவற்றுக்குத் தெரிவதில்லை; தெரிய வேண்டியதும் இல்லை.

பெருங்காலத்திற்காகவே படைக்கப்பட்ட உயிர்களுக்கு, பெருங்காலத்திற்காகவே உருவாக்கப்பட்ட படைப்புகளுக்கு நுண்காலத்தில் புகார்கள் இருப்பதில்லை. நுண்காலத்தில் நடக்கும் எதுவும் அவற்றிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. நுண்காலத்திற்கும் பெருங்காலத்திற்குமான குழப்பங்கள் அவற்றிடம் இருப்பதில்லை. அவற்றின் நுண்காலம் அச்சம் நிறைந்ததாக இருப்பதில்லை. அவற்றின் நுண்காலத்தில் ‘போர்’ அடிப்பதில்லை. அவை நுண்காலத்தை ‘மேலாண்மை’ செய்வதில்லை. அவை நுண்காலத்திற்காகச் சேமிப்பதில்லை.

ஏனென்றால், அவை மனிதர்கள் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு