‘பொழுது’ தொடர் | அத்தியாயம்: 3 | நுண்காலத்தில் வாழ்தல்

இப்போதுள்ள நவீன வாழ்க்கை முறையின் கோளாறுகளில் ஒன்று, எப்போதும் எதிர்காலத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பது – எதிர்காலத்திற்காகவே உழைப்பது – எதிர்காலத்திற்காகவே பொருளீட்டுவது – எதிர்காலத்திற்காகவே சேமிப்பது – எதிர்காலத்திற்காகவே பாடுபடுவது – எதிர்காலத்திற்காகவே வாழ்ந்து மடிவது.

ஒரு குழந்தை பள்ளியில் சேரும்போதே, அக்குழந்தையின் இலக்கு பெற்றோர்களால் குறிவைக்கப்படுகிறது. பள்ளியைத் தேர்ந்தெடுக்கும்போதே குழந்தையின் இலக்கு நோக்கிய பயணம் தொடங்கி விடுகிறது.

ஒரு லிட்டர் புட்டிக்குள் பத்து லிட்டர் தண்ணீரை நிரப்புவதைப் போல, குழந்தையின் மூளைக்குள் கல்வி திணிக்கப்படுகிறது. ஒவ்வொரு வகுப்பிலும் மதிப்பீட்டு முறைகள், எதிர்காலத்தில் எப்போதோ வரப்போகும் நுழைவுத் தேர்வுகளுக்காக இப்போதே தனிப் பயிற்சிகள், ஓவியம் வரைவதில் ஆரம்பித்து ஒன்றுக்குப் போவது வரைக்கும் எல்லாவற்றிலும் போட்டிகள்… வெற்றிபெற்றாக வேண்டிய நெருக்கடிகள்…

எதிர்காலத்திற்காகப் படிக்க வேண்டும். எதிர்காலத்திற்காக மதிப்பெண்களைப் பெற வேண்டும். எதிர்காலத்திற்காக உயர் கல்வியில் சேர வேண்டும். எதிர்காலத்திற்காகவே உயர் கல்வியை முடிக்க வேண்டும்.

பிறகு எதிர்காலத்திற்காகவே ஒரு ‘நல்ல’ நிறுவனத்தில் வேலைக்குச் சேர வேண்டும். வேலைக்குச் சேர்ந்த பிறகு, எதிர்காலத்திற்காகவே கடுமையாக உழைக்க வேண்டும். அப்போதுதான் நல்ல சம்பளத்தைப் பெற முடியும். நல்ல சம்பளத்தைப் பெற்றால்தான் ‘நல்ல இடத்தில்’ திருமணம் முடிக்க முடியும்.

திருமணம் முடிந்தபிறகு மீண்டும் எதிர்காலத்திற்காக உழைக்கத் தொடங்க வேண்டும். அப்போதுதான் வீடு வாங்க முடியும், கார் வாங்க முடியும், இன்னபிற சொத்துகளை வாங்க முடியும். எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய வேண்டும். இப்படியெல்லாம் செய்தால்தான் சுற்றத்தாரிடம் மரியாதை கிடைக்கும். நண்பர்களிடம் மரியாதை கிடைக்கும். சமூகத்தில் மரியாதை கிடைக்கும்.

சரி, வீடு வாங்கியாயிற்று, கார் வாங்கியாயிற்று, ஆசைப்பட்டவை அனைத்தையும் வாங்கியாயிற்று. இப்போதும் எதிர்காலத்திற்காக உழைக்க வேண்டும். ஏனென்றால், ஓய்வுக்கால வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அல்லவா?

ஓய்வுக்கால வாழ்க்கையும் வந்துவிட்டது. இப்போதும் எதிர்காலத்தை நினைத்து உழைத்தாக வேண்டும். இல்லாவிட்டால் வங்கிக் கணக்கில் இருப்பு இருக்காது. வங்கிக் கணக்கில் இருப்பு இல்லாவிட்டால், பெற்ற பிள்ளைகளின் வீட்டில் இடமிருக்காது. சுற்றத்தார் மத்தியில் மரியாதை இருக்காது.

பெரும்பாலானோருக்கு கொஞ்சம் கூடுதலாக வியர்த்தாலே எதிர்கால வாழ்க்கை குறித்த அச்சம் தொடங்கிவிடுகிறது. எனக்கு ஏன் அதிகமாக வியர்க்கிறது? இரத்தக் கொதிப்பாக இருக்குமோ? தலை சுற்றுவதைப் போல இருக்கிறதே? சிறுநீர் அடிக்கடிப் போகிறதே? சர்க்கரை அதிகமாகிவிட்டதோ? நம்மை நம்பித்தானே குடும்பம் இருக்கிறது? நம்மை நம்பித்தானே குழந்தைகள் இருக்கின்றன? நாம் இல்லாவிட்டால், குடும்பத்தின் எதிர்காலம் என்ன ஆவது? நாம் இல்லாவிட்டால் குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆவது?


இப்படி யோசித்து யோசித்தே இல்லாத நோயை பொல்லாத நோயாகக் கற்பனை செய்துகொண்டு, அவற்றை வரவழைத்துக் ஆரத்தழுவி, அவற்றின் பிடியிலேயே வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் அதிகம் பேர்.


வாழ்நாள் முழுக்க எதிர்கால வாழ்க்கைக்காகவே பாடுபட்டுக் கொண்டிருப்பவர்களிடம் நான் கேட்க விரும்பும் கேள்வி இதுதான்.நீங்கள் எதிர்காலம் என எதை நினைக்கிறீர்கள்? அந்த எதிர்காலமானது எப்படி இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? அந்த எதிர்காலமானது எப்படி இருக்க வேண்டும் என உங்களிடம் ஏதாவது தீர்மானம் இருக்கிறதா?


என்னைப் பொருத்தவரை, எதிர்காலம் என்பதே ஒரு கற்பனைக் காலம்தான். நேற்றைக்கு எதிர்காலமாக தெரிந்தது, இன்றைக்கு நிகழ்காலமாக இருக்கிறது. இன்றைக்கு எதிர்காலமாகத் தெரிவது, நாளைக்கு நிகழ்காலமாக இருக்கப்போகிறது. அவ்வளவுதான் எதிர்காலத்திற்கான என்னுடைய விளக்கம். எதிர்காலம் என்கிற கருத்தை நான் அப்படித்தான் புரிந்துகொள்கிறேன்.


இப்போது சொல்லுங்கள். எதிர்கால வாழ்க்கைக்காகவே பாடுபடும் எல்லோரும் தங்களின் நிகழ்கால வாழ்க்கையை இழந்துகொண்டிருக்கிறார்களா, இல்லையா?


எதிர்காலத்திற்காகவே வளர்க்கப்பட்ட ஒரு குழந்தையின் வாழ்க்கையில் கிட்டிப்புள் விளையாட்டிற்கு இடமுண்டா? நுங்குகள் நோண்டப்பட்ட பனங்காய் மட்டையில் மூங்கில் குச்சியை செருகி வண்டியோட்டியதுண்டா? தவளைக்கல் எறிந்து குளத்துக்குள் விரிந்த வட்டங்களை எண்ணியதுண்டா? ஊர்க்குளமோ, ஓடும் நதியோ, பாதுகாப்புக் கவசமில்லாமல் நீச்சலடித்ததுண்டா? வேப்ப மரத்தில் ஏற முயற்சித்து, கீழே சரிந்து, தொடையில் சிராய்ப்பு ஏற்பட்டதுண்டா? பிரண்டைச் செடிக்கு நடுவில் தலை நீட்டிய பச்சைப் பாம்பைப் பார்த்து பயந்தோடியதுண்டா? பின்னர் பாம்புகளைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை, அவையும் சக உயிர்கள்தான் என்று உணர்ந்து கொண்டதுண்டா? பம்பரக் கயிற்றின் முனையில் தடவ வேப்பம்பால் சிறந்ததா? ஆலம்பால் சிறந்ததா? என பம்பர ஆணியால் குத்திக் கிழித்து சோதித்தறிந்ததுண்டா?


எதிர்காலத்திற்காகவே வளர்க்கப்பட்ட ஓர் இளைஞனின் கல்லூரிக் காலத்தில் எத்தனைக் காதலுக்கு இடமிருந்தது? வாழ்வின் கோப்பையை நிறைக்க ஒரு பெண், கவிழ்க்க ஒரு பெண். எவர் எதற்கு வருகிறார் என அனுபவ ஆசானிடம் கற்றுத் தெளிந்ததுண்டா?


பாரதியாரின் கவிதைக்குள் கண்ணம்மாக்களைத் தேடி பக்கம் புரட்டியதுண்டா? கபடி விளையாட்டின்போது கால் எலும்பு முறிந்ததுண்டா? நல்ல இசை, நல்ல மழை, நல்ல தேநீர், நல்ல பயணம், நல்ல நட்பு போன்றவற்றுக்கு இடமிருந்ததா அந்த இளைஞனின் வாழ்க்கையில்? தனியே ஒரு மலைப் பயணம்… தனியே ஒரு மழைப் பயணம்… ஒரு திரைப்பட ரசனை… ஓர் அரசியல் போராட்டம்… எதற்கு இடமிருக்கிறது அந்த இளைஞனின் வாழ்க்கையில்?


இப்படி பள்ளிக் காலத்திலும், கல்லூரிக் காலத்திலும் இல்லாதவைகளையே சுமந்த இளைஞன், வாழ்க்கைக்குள் நுழையும்போது மட்டும் எப்படி ரசனைகளை அள்ளி பூசிக் கொள்ள முடியும்? திங்கட்கிழமை காலைகளில் நடைபெறும் அலுவலக சந்திப்புகளுக்கும், ஞாயிற்றுக்கிழமை மாலைகளில் காணும் மொக்கை திரைப்படங்களுக்கு நடுவில் வாழ்க்கை வட்டமடித்து வட்டமடித்து தேய்ந்துபோகாதா?


அமெரிக்கக் கவிஞர் Robert Frost எழுதிய Stopping by Woods on a Snowy Evening என்ற கவிதை எனக்கு மிகவும் பிடித்தமானது. பயணத்தின் போது எதிர்ப்படும் கிராமங்களின் அழகில், கடந்துசெல்லும் காடுகளின் அழகில் மனதைத் தொலைக்கிறான் ஒருவன். இப்படியான காடுகளைக் காண்பது அவனுடைய குதிரைக்கே வியப்பைத் தருகிறது. அன்றைய இரவுப் பொழுதை அங்கேயே கடத்திவிட்டுச் செல்லலாம் என்றால், காலைக்குள் அவன் போக வேண்டிய ஊரைச் சென்றடைய வேண்டியிருக்கிறது. இந்தச் சூழலில், Robert Frost, கவிதையை இப்படி நிறைவு செய்கிறார்:


The woods are lovely, dark and deep
But I have promises to keep
And miles to go before I sleep
And miles to go before I sleep.


இதில் கடைசி இரண்டு வரிகளில் உள்ள ‘And miles to go before I sleep’ என்ற வார்த்தைகள் சுய முன்னேற்றத்திற்கான ஊக்கம் தரும் வாசகங்களாக மாற்றப்பட்டுவிட்டன. ஒரு காலத்தில் இந்த வரிகள் எனக்கும், என்னுடைய நண்பர்கள் சிலருகும் ஆதர்சமாக, எங்களுடைய செயல் ஊக்கத்திற்கு தூண்டுகோலாக இருந்திருக்கின்றன.


ஆனால், தூங்குவதற்கு முன்பு நான் எத்தனை மைல்களைக் கடந்து சென்றாலும், தூங்கி விழிக்கும்போது நான் என்னுடைய படுக்கையில் இருந்துதான் எழ வேண்டியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு வெகு நாட்கள் ஆயிற்று.


எதிர்கால வாழ்க்கைக்காக நாளைகளை சேமிக்க நினைப்பவர்கள், இன்றைய நாட்களை விரயம் செய்கிறார்கள். நாளைக்கு சளி பிடித்துவிடும் என்று ஒதுங்கி நிற்பவர்கள், இன்றைக்கு பொழியும் மழைத்துளிகளின் வாழ்த்துகளை இழக்கிறார்கள். நாளைக்கான வேலைகளை இன்றே செய்துமுடிப்பவர்கள் இன்றைக்கான பாடல்களைக் கேட்காமலேயே போகிறார்கள். நாளைக்கான திட்டமிடல்களிலேயே மூழ்கிப் போகிறவர்கள், இன்றைக்கான இன்பங்களை வீணடிக்கிறார்கள்.


மகாத்மா காந்தியின் எழுத்துகளில், அவருடைய எண்ணற்ற வாசகங்களில் நான் கரைந்து போயிருக்கிறேன். அவற்றில் எனக்கு மிகப் பிடித்த வாசகம், “நிகழ்காலம் சிறப்பானதாக இருந்தால், எதிர்காலம் வேறாக இருக்க முடியாது.”


யாரொருவர் நிகழ்காலத்தைச் சரியாக வடிவமைத்துக் கொள்கிறாரோ, அவரது எதிர்காலமும் நிச்சயமாக சரியானதாகவே இருக்கும் என்கிற அவரது கருத்தில் நான் முழுமையாக உடன்படுகிறேன். இதைவிட எளிதாக, இன்றைக்கான மதிப்பை ஒரு வாசகத்தின் மூலம் உணர்த்திவிட முடியாது என நினைக்கிறேன்.


ஏறக்குறைய 80 ஆண்டுகளைக் கொண்ட ஒரு மனிதரின் வாழ்க்கையை பெருங்காலம் என்று வைத்துக் கொண்டால், அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் நுண்காலம் என்று சொல்லலாம். அவரது வாழ்க்கையின் ஒரே ஒரு நாளை பெருங்காலம் என்று வைத்துக் கொண்டால், அந்த நாளின் ஒவ்வொரு நிமிடத்தையும் நுண்காலம் என்று சொல்லலாம்.


யாரொருவர் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியோடு கடத்துகிறாரோ, அவரது ஒவ்வொரு நாளும் மனநிறைவோடுதான் முடியும். யாரொருவர் ஒவ்வொரு நாளையும் மனநிறைவோடு முடிக்கிறாரோ, அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையும் கொண்டாட்டமாகத்தான் அமையும்.


மனிதர்களைப் பொருத்தவரை எல்லாவற்றுக்கும் காரணம் தேவைப்படுகிறது.


சிவப்பரிசி சாப்பிட்டால் நல்லது. ஏன் நல்லது? சிவப்பரிசி சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். இப்படிச் சொல்லிவிட்டால் போதும், ஒரு காரணம் தனக்கான இடத்தை உறுதி செய்துகொண்டுவிடும். அத்திப்பழச் சாறு சாப்பிட்டால் நல்லது. ஏன் நல்லது? அத்திப்பழச் சாறு சாப்பிட்டால் இரத்தப் புற்றுநோய் சரியாகும். இப்படிச் சொல்லிவிட்டா இன்னொரு காரணம் மனித மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துகொள்ளும். இப்படி அனைத்துக்கும் காரணங்கள் தேவைப்படுகின்றன.


இதைச் செய்தால், அது நடக்குமா என்று என்னிடம் யாராவது கேட்டால் ‘எனக்குத் தெரியாது’ என்பதே என்னுடைய பதில்.


இந்த உணவைச் சாப்பிட்டால், அந்த நோய் கட்டுப்படுமா? இந்தப் பேருந்தில் ஏறினால், அந்த ஊரை அடைந்துவிட முடியுமா? இப்போது கிளம்பினால், அப்போது சென்றுவிட முடியுமா? இதைக் கொடுத்தால், அது கிடைக்குமா? இப்படி அன்றாடம் எண்ணற்ற கேள்விகள், கேள்விகளுக்குப் பின்னே எண்ணற்ற காரணங்கள்.


இந்தக் கேள்விகள் அனைத்துக்குமே உண்மையான பதில் ‘எனக்குத் தெரியாது’ என்பதுதான்.


என்னிடம் சிகிச்சைக்கு வருவோரிடத்தில், எப்போதும் மகிழ்ச்சியோடு இருங்கள் என்று சொன்னால், சும்மா இருக்கும்போது எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என்று கேட்பவர்கள் தான் அதிகம். சும்மா இருத்தலே ஒரு மகிழ்ச்சிதான் என்று அவர்களுக்கு எப்படி நான் புரியவைப்பேன்.


மகிழ்ச்சியாக இருப்பதற்கும், இன்பமாக இருப்பதற்கும் காரணமே தேவையில்லை. துன்பத்திற்குத்தான் காரணங்கள் தேவை.


நுண்காலத்தில் இன்பத்தை அனுபவிப்பவர்கள், பெருங்காலத்தைத் திருவிழாவாக்குகிறார்கள். நுண்காலத்தின் மதிப்பறியாமல் கடந்து போகிறவர்கள், பெருங்காலத்தை விரயமாக்குகிறார்கள்.
இந்த நிமிடத்தில் நான் எங்கே இருக்கிறேன்? இந்த நிமிடத்தில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? இந்த நிமிடத்தில் நான் என்ன செய்ய வேண்டும்?


இந்தக் கேள்விகளில் தங்களின் உயிர், உடல், உள்ளத்தினை நிலை நிறுத்துபவர்கள் புண்ணியவான்கள்.


இந்த நேரத்தில் நான் பார்க்க வேண்டிய கண்களை மூட மாட்டேன். இந்த நேரத்தில் நான் கேட்க வேண்டிய செவிகளை அடைக்க மாட்டேன். இந்த நேரத்தில் நான் இழுக்க வேண்டிய மூச்சை நிறுத்த மாட்டேன். இந்த நேரத்தில் நான் பாட வேண்டிய பாடலை மறுக்க மாட்டேன். இந்த நேரத்தில் நான் உணர வேண்டிய வலியை வெறுக்க மாட்டேன். இந்த நேரத்தில் நான் துய்க்க வேண்டிய இன்பத்தை இழக்க மாட்டேன். இந்த நேரத்தில் நான் துலக்க வேண்டிய செயலைத் தவிர்க்க மாட்டேன். இந்த நேரத்தில் நான் செய்ய வேண்டிய அன்பை விலக்க மாட்டேன்.


இப்படி வாழ்வோர் இறைநிலை அடைந்தோர்.

O


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு