’யாவரும் நலம்’ வினா-விடை

யாவரும் நலம் வகுப்பில் பங்கேற்றவர்கள் எழுப்பிய வினாக்களும் அவற்றுக்கான விடைகளும்:

(குறிப்பு: கேள்விகள் தலைப்பு வாரியாக தொகுக்கப்பட்டுள்ளன. கேள்வியெழுப்பியவர்களின் பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.)

 

கண்கள்

கே: பாலினம் – ஆண். வயது 41. வலது கண்ணிற்கு வலது புறத்திலும், இடது கண்ணிற்கு இடது புறத்தில் கருமை நிறமாக இருக்கிறது.கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக. புதிதாக பார்ப்பவர்கள் எங்காவது விழுந்து விட்டீர்களா அல்லது அடி பட்டதா என்று கேட்பார்கள். இதுவரை எந்த மருந்தும் எடுத்து கொள்ளவில்லை.

ப: இவரை நேரில் சந்தித்து நாடி பார்த்துவிட்டுத்தான் சொல்ல வேண்டும். இப்போதைக்கு இரண்டு கண்களிலும் கருமை நிறமாக உள்ள இடத்திலும் நீர் ஒத்தடம் கொடுக்கவும். ஒரு சுத்தமான துணியை குளிர்ந்த பச்சைத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்துவிட்டு, காலை, இரவு என இரு வேளையும் 5 நிமிடங்களுக்கு ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

பற்கள்

கே: பற்களில் ஏன் பூச்சி வருகிறது? அதற்கு நம் மருத்துவத்தில் உள்ள தீர்வுகள் என்ன?

ப: மிகையாக இனிப்பு சாப்பிடுபவர்கள், பற்களை சரியாக சுத்தம் செய்யாதவர்களுக்கு பற்களில் பூச்சி வரும். இதன் காரணமாக ஏற்படும் பற்கூச்சம், பல்வலி போன்றவை ஏற்பட்டால், கொய்யா இலை நீரில் வாய் கொப்பளித்தல் நல்ல பலனைத் தரும். 5 கொய்யா இலைகளை 3 டம்ளர் நீரில் போட்டு கொதிக்கவிட்டு, இறக்கி நன்கு ஆறவைத்துக் கொள்ள வேண்டும். இதுவே கொய்யா இலை நீர். இதில் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை வாய் கொப்பளிக்க வேண்டும். பல் பூச்சி காரணமாக, பற்களில் துளைகள் ஏற்பட்டால், அதனை எனக்குத் தெரிந்த மரபு மருத்துவத்தில் சரிசெய்ய இயலாது.

கே: பற்களில் மஞ்சள் காரை போல படிந்து உள்ளது. பல்பொடி தொட்டு பிரஷால் பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருகிறது. பற்பசை பயன்படுத்துவது இல்லை.

ப: மேலே உள்ள கேள்விக்கான பதிலில் சொல்லப்பட்டுள்ள கொய்யா இலை நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். பகல் உணவில் பிரண்டைத் துவையலை 5 அல்லது 7 நாட்களுக்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். பிரண்டைத் துவையல் செய்முறை இந்த இணைய தளத்தின் மருந்து செய்முறை பக்கத்தில் உள்ளது.

நுரையீரல்

கே: என் பேரனுக்கு நான்கைந்து மாதங்களாக சளி இருமல் இருக்கிறது. ஆனால் எப்பவுமே இருப்பதில்லை. நம் மருத்துவ முறைகளை உபயோகபடுத்தி கொண்டு உள்ளேன். இதற்கு தங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.

ப: குழந்தைகள் என்றால், அடிக்கடி சளித் தொந்தரவுகள் வரத்தான் செய்யும். சளித் தொந்தரவுகள் அடுத்த கட்டத்தை – அதாவது, காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்றவற்றை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு நம்முடைய மருந்துகள் பயனளிக்கும்.

கே: எனக்கு 3 நாட்களாக சளி தொந்தரவு. துப்பினால் கலங்காசு அதாவது ஜவ்வரிசி போல் வருகிறது. ஆலோசனை சொல்லவும்.

ப: சீரக நீர், தூதுவளை வறுவல், மிளகு கசாயம் (தலா 5 நாட்கள்) உட்கொள்ளவும். இவற்றுக்கான செய்முறை இந்த இணைய தளத்தின் மருந்து செய்முறை பக்கத்தில் இருக்கிறது.

கே: என் மகளுக்கு 11 வயது ஆகிறது. அவளுக்கு அடிக்கடி சளித் தொந்தரவு ஏற்படுகிறது. உங்களிடம் சந்தித்து ஆலோசனை பெற்றால் சரியாகிவிடுகிறது. இரண்டு அல்லது மூன்று வாரங்களில் மீண்டும் சளித் தொந்தரவு ஆரம்பிக்கிறது. அவளுடைய முகத்தருகில் சென்றால் ஒருவிதமான துர்நாற்றம் வீசுகிறது. முடி உதிர்தல், சோர்வு போன்றவையும் இருக்கிறது.

ப: பொதுவாக குழந்தைகளுக்கு அடிக்கடி சளித் தொந்தரவுகள் வரும். எதனால் அடிக்கடி வருகிறது என்பதைக் கண்டறிந்து, அதனை சரிசெய்ய வேண்டும். தின்பண்டங்களை அதிகமாக சாப்பிடுவது, இனிப்பு வகைகளை அதிகமாக சாப்பிடுவது போன்றவை பெரும்பாலான குழந்தைகளுக்கான காரணங்கள். சளி அதிகமாக உடலில் சேர்ந்தால், உடல் வெப்பம், பசியின்மை போன்றவையும் அதிகமாகும். இதனால்தான் முடி உதிர்தல், சோர்வு போன்றவை ஏற்படுகின்றன.

கே: சளி வரும் பொழுது சில தவிர்க்க முடியாத காரணத்தினால் அதை உள்ளேயே அடைக்கி வைத்தால், அது எங்கு சென்று தேங்கும்? அந்த சளி என்ன ஆகும்? இதனால் ஏற்படும் தொந்தரவும், அதற்கான தீர்வும் என்ன?

ப: சளியை அடக்கும் போது, அது அவரவர் உடம்பின் இயல்புக்கேற்ப எங்கு வேண்டுமானாலும் சென்று தங்கும். பொதுவாக நுரையீரலில் தங்குவதுண்டு. ஒரு சில பெண்களுக்கு மார்பகங்களில் தங்கும் (இதைத்தான் பின்னாளில் மார்பக புற்றுநோய் என்று சொல்வார்கள்.) கர்ப்பப்பையில் தங்கி, வெள்ளைப்படுதலாக வெளியேறும். ஒரு சிலருக்கு குடல் பகுதியிலோ, உடம்பில் மேல் பகுதியிலோ தங்கி, காலப் போக்கில் கட்டிகளாக மாறும். சளித் தொந்தரவு ஏற்படும்போதே அடக்கி வைக்காமல், வெளியேற்றுவதற்கான மருந்துகளை, உணவுகளை உட்கொள்வதுதான் இவற்றுக்கான தீர்வு.

கே: வெளியில் சென்று வந்தால் கருப்பாக சளி வருகிறது. வீட்டில் இருக்கும் போது அப்படி வருவதில்லை. சில நேரங்களில் மஞ்சளாகவும், கட்டியாகவும், நீர்மமாகவும் மாறி மாறி வருகிறது. நீங்கள், கருப்பாக சளி வந்தால் அது நீண்ட நாளாக தேங்கிய சளி என்று சொன்னீர்கள். எனவே இதுகுறித்த விளக்கம் தேவை.

ப: உங்களுக்கு இருப்பது நீண்ட கால சளிதான். துளசி நீர், தூதுவளை வறுவல், மிளகு கசாயம் (தலா 7 நாட்கள்) அல்லது முக்கடுகு சூரணம் (21 நாட்கள்) உட்கொள்ளலாம்.

கே: எனக்கு வாரத்தில் இரண்டு நாட்களாவது காலையில் எழுந்தவுடன் எதோ ஒன்று தூண்டுதல் (trigger) ஆகி சளி பிடித்து விடும். தொடர்ந்து தும்மல் வந்து கொண்டே இருக்கும், மூக்கில் தண்ணீர் கொட்டிக் கொண்டே இருக்கும். அந்த நாள் முழுவதும் எந்த வேலையும் செய்ய முடியாது. அன்று இரவு நன்றாக தூங்கி எழுந்தால் அடுத்த நாள் நின்று விடும். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்த தொந்தரவு இருக்கிறது. இதில் இருந்து விடுபட ஏதும் வழி இருந்தால் சொல்லுங்கள்.

ப: நாள்தோறும் தலைக்கு குளிப்பது அவசியம். முக்கடுகு சூரணம் மருந்தை 14 நாட்கள் அல்லது 21 நாட்களுக்கு சாப்பிடலாம். அதன் செய்முறை இந்த இணைய தளத்தின் மருந்து செய்முறை பக்கத்தில் இருக்கிறது.

கே: பாலினம் – ஆண். வயது 5. காய்ச்சல் வந்தால் அரிசி கஞ்சி, ஆற வைத்த தண்ணீர் கொடுக்கும்போது காய்ச்சலில் இருந்து மீண்டு வந்து விடுகிறான். காய்ச்சல் சமயத்தில் எந்த இடத்தில் சூடு இருக்கிறது என்று தொட்டு பார்க்கும்பொழுது நெஞ்சுக்கு கீழே துடிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. இது காய்ச்சல் சமயங்களில் இருக்கும் இயல்பான ஒன்றுதானா? அல்லது கவனத்தில் கொண்டு பார்க்க வேண்டுமா? இரவில் பல நேரங்களில் வாய் வழியாக தான் அதிகமாக மூச்சு விடுகிறான்.

ப: காய்ச்சல் நேரத்தில் நெஞ்சுக்கு அடியில் துடிப்பு அதிகமாக இருப்பதற்கும், வாய் வழியாக மூச்சு விடுவதற்கும் ஒரே காரணம் தான் – நுரையீரலில் சளித் தேக்கம் அதிகமாக உள்ளது. துளசி நீர், தூதுவளை வறுவல், மிளகு கசாயம் (தலா 5 நாட்கள்) போன்ற மருந்துகள் பலனளிக்கும். அவற்றின் செய்முறை இந்த இணைய தளத்தில் மருந்து செய்முறை பக்கத்தில் உள்ளன.

கே: பாலினம் – ஆண். வயது 10. ஒரு மாதத்திற்கு முன்பாக ஒன்று இரண்டாக இருந்த வெண்புள்ளி முகம் முழுவதும் இப்போது வந்துவிட்டது. மாலை, இரவு மற்றும் காலை எழுந்தவுடன் லேசாக இருமல் இருக்கிறது. இரண்டு வாரத்திற்கு முன்பு எட்டு நாட்கள் குப்பை மேனி நீர் மட்டும் கொடுத்தோம்.

ப: குப்பைமேனிச் சாறு (2 நாட்கள்), துளசி நீர், தூதுவளை வறுவல், மிளகு கசாயம் (தலா 5 நாட்கள்) போன்ற மருந்துகள் பலனளிக்கும். அவற்றின் செய்முறை இந்த இணைய தளத்தில் மருந்து செய்முறை பக்கத்தில் உள்ளன.

கே: நாள்பட்ட கப தேக்கம் தான் உடலில் பல நோய்களுக்கு காரணம் என்றால் , வாதம், பித்தம், கபம் என்ற வரிசையில் வாதமாகவோ, பித்தமாக இருக்கும் பொழுதே அதை சரி செய்து கொள்ள முடியுமா? வாதம் மற்றும் பித்தத்தினால் ஏற்படக்கூடிய தொந்தரவுகள், அதை அறிந்து கொள்ளும் முறை என்ன?

ப: வாதம், பித்தம், கபம் என்று எது அதிகமானாலும் உங்களுக்கு ஏதாவது ஒரு தொந்தரவின் மூலம் உடம்பு உணர்த்தும். அந்த தொந்தரவுக்கு நீங்கள் தீர்வைத் தேடினால் போதுமானது. உடம்பில் வாதம் பெருகினால், வயிறு உப்புதல், ஏப்பம், மூச்சுப் பிடிப்பு, மூச்சிறைப்பு போன்றவை ஏற்படும். பித்தம் பெருகினால், குதிகால்களில் வெடிப்பு, லேசாக தலை சுற்றுதல், மயக்கம், கசப்பான வாந்தி ஆகியவை ஏற்படும். கபம் பெருகினால், இருமல், தும்மல், மூச்சு விடுவதில் சிரமம், ஒரு சிலருக்கு தோல் தொந்தரவு ஆகியவை ஏற்படும்.

கே: உறங்கும்போது குறட்டை அதிகமாக உள்ளது. இதை குறைப்பதற்கு  வழிகாட்ட இயலுமா?

ப: உங்களின் நுரையீரலில் நீண்ட நாள் சளித் தேக்கம் இருக்கலாம். நீங்கள் உள்ளிழுக்கும் காற்று நுரையீரலின் தரையைத் தொடவில்லை. சளிக்கான மருந்துகள், மூச்சுப் பயிற்சி போன்றவை இதற்கான தீர்வாக அமையும்.

வயிறு

கே: வயிற்றில் எவ்வாறு காற்று சேருகிறது? வயிறு உப்புவதற்கு என்ன காரணம்?

ப: பருப்பு வகைகள், கொத்தவரை போன்ற உணவுப் பொருட்களால் வயிற்றில் காற்று சேரும். அவற்றை சமைக்கும் போது பூண்டு, பெருங்காயம் போன்றவற்றைச் சேர்த்து சமன் செய்ய வேண்டும். கடுகு தாளிதம் காற்றுப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும். சமைக்கப்பட்ட உணவை குளிர்பதன பெட்டியில் வைத்து, அடுத்த நாள் சாப்பிட்டாலும் காற்றுப் பெருக்கம் ஏற்பட்டு, வயிறு உப்பும். ஒரு சிலருக்கு அதிகப்படியான சிந்தனையோட்டமும் காற்றைக் கூட்டும்.

கே: தொப்பை என்பது காற்று சேர்க்கையா? இல்லை.  கொழுப்பா?

ப: வயிற்றில் காற்று சேர்ந்தால், வயிறு உப்பும். கொழுப்பு சேர்ந்தால் தொப்பை பெருகும். பூண்டு, பெருங்காயம் போன்ற உணவுப் பொருள் சேர்க்கையினாலும், குனிந்து, நிமிரும் உழைப்பு / உடற்பயிற்சியினாலும் தொப்பையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கலாம்.

கே: மலச்சிக்கலுக்கு நீங்கள் சொன்ன வழிமுறைகள் செய்த பிறகும் ஒரு மாதம் கழித்து மீண்டும் அந்த சிக்கல் வருமானால் என்ன செய்யலாம். மூச்சுப்பயிற்சி அதற்கு நிரந்தர தீர்வாகுமா?

ப: நன்கு கனிந்த வாழைப்பழங்கள் இரண்டு, நாட்டுச் சர்க்கரை 1 கரண்டி, தண்ணீர் 1 டம்ளர். வாழைப்பழங்களை தோல் நீக்கிவிட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, நாட்டுச் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து, மிக்சியில் நன்கு அரைத்து, இரவு தூங்கப் போகும் போது குடிக்கவும். 5 முதல் 7 நாட்களுக்கு தொடர்ச்சியாக பருகலாம்.

அத்துடன் மன அமைதியின்மையும் தொடர்ச்சியான மலச் சிக்கலுக்குக் காரணமாக அமையலாம். அப்படியானால், மன அமைதிக்கான வழிகளைத் தேட வேண்டும்.

மலச்சிக்கலுக்கு தீர்வாக நான் மூச்சுப் பயிற்சியை பரிந்துரைப்பதில்லை.

சிறுநீரகம்

கே: சிறுநீர் வெப்பமடைந்தால் உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் வெப்பமாகிவிட்டது என புரிந்து கொள்ளலாமா?

ப: ஆமாம். தண்ணீர் அல்லது பழச்சாறுகள் குடிப்பதை அதிகப்படுத்த வேண்டும். சாத்துக்குடிச் சாறு, வெண்பூசணிச் சாறு, எலுமிச்சைச் சாறு போன்றவை உடனடியாக உடம்பை குளிர்விக்கும் தன்மை கொண்டவை. வாய்ப்புள்ளவர்கள் கூடுதலாக ஒன்றிரண்டு முறை குளிக்கலாம்.

மூட்டு

கே: எனது அம்மாவிற்கு 52 வயதாகிறது அவர் கால் முட்டி மிகமிக வலிப்பதாக கூறுகிறார். சரவாங்கி இருப்பதாக சொல்கிறார்கள். அதற்கு என்ன செய்வது?

ப: மூட்டுகளிலோ, கால்களிலோ வீக்கம் இருக்கிறதா என்று பாருங்கள். வீக்கம் இருந்தால், சிறுநீரகத்தில் கழிவுத் தேக்கம் இருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம். காலையில் வெறும் வயிற்றில் வெண்பூசணிச் சாறு (1 டம்ளர்) + எலுமிச்சைச் சாறு (சிறிதளவு) + நாட்டுச் சர்க்கரை (தேவைக்கேற்ப) சேர்த்து கலக்கி 5 நாட்களுக்கு குடிக்கலாம்.

வீக்கம் எதுவும் இல்லை என்றால், வலி ஏற்படும் இடங்களில் முதல் நாள், கற்றாழை தேய்த்து குளிக்க வேண்டும். அடுத்த நாள், நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இப்படியாக மாற்றி மாற்றி வலி குறையும் வரை தேய்த்து குளிக்கலாம்.

உணவில் வெண்டைக்காய், கிழங்கு வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் – உருளைக் கிழங்கு தவிர.

குதிகால்கள்

கே: பாலினம் – பெண். வயது 33. ஒரு மணி நேரத்திற்கு மேலாக நின்று கொண்டு வேலை செய்தால் வலது குதிகாலில் வலி ஏற்படுகிறது. இதற்கு தீர்வு என்ன?

ப: உடல் வெப்பமடைந்துள்ளதா என்பதை கண் எரிச்சல், நெஞ்செரிச்சல், சிறுநீர் மஞ்சளாக போவது ஆகியவற்றை வைத்து கண்டறியலாம். அப்படியானால், உடல் வெப்பத்தைக் குறைப்பதற்கான உணவு முறைகளை (பழைய சோறு, நீராகாரம், வெள்ளரி, பழச்சாறுகள், நெய், நல்லெண்ணெய் போன்றவை) மேற்கொள்ள வேண்டும். எண்ணெய் குளியலும், ஆழ்ந்த உறக்கமும் அவசியம். தற்காலிக தீர்வாக, இரவு உறங்க செல்லும் முன் குளிர்ந்த பச்சைத் தண்ணீரில் இரண்டு கால்களையும் 15 நிமிடங்களுக்கு வைத்துக் கொள்ளலாம். 3 அல்லது 5 நாட்களுக்கு வைக்க வேண்டும்.

கே: என் நண்பருக்கு நீண்ட நாட்களாக உள்ளங்கால், குதிகால் ஆகியவற்றில் வலி, எரிச்சல் இருக்கிறது. மிக மிக சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார். வயது 40. என்ன செய்ய வேண்டும்?

ப: சிறுநீரகம் வெப்பமாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் வெண்பூசணிச் சாறு (1 டம்ளர்) + எலுமிச்சைச் சாறு (சிறிதளவு) + நாட்டுச் சர்க்கரை (தேவைக்கேற்ப) சேர்த்து கலக்கி 7 நாட்களுக்கு குடிக்கலாம். உடம்பை குளிர்விக்கும்படியான உணவு முறைகள் / குளியல் முறைகளைப் பின்பற்ற வேண்டும். இரவு உறங்க செல்லும் முன் குளிர்ந்த பச்சைத் தண்ணீரில் இரண்டு கால்களையும் 15 நிமிடங்களுக்கு வைத்துக் கொள்ளலாம். 3 அல்லது 5 நாட்களுக்கு வைக்கலாம்.

உடல்

கே: உடல் மெலிவதற்கு என்ன காரணம்? உடலில் தசை ஏற்பட என்ன செய்யவேண்டும்?

ப: உடம்பில் தொடர்ச்சியாக வெப்பம் கூடிக் கொண்டே இருந்தால் உடல் மெலியும். சில உணவுப் பழக்கங்கள், பணிச் சூழல், மனக்கவலை, தூக்கமின்மை போன்றவற்றால் உடலில் மிகை வெப்பம் குடிகொள்ளும். அதனால் உடல் மெலியும். உடல் எடை பெருக வேண்டுமானால், உடலில் நீராற்றல் சேர வேண்டும். உடல் வெப்பத்தைக் குறைப்பதற்கான உணவு முறைகளை (பழைய சோறு, நீராகாரம், வெள்ளரி, பழச்சாறுகள், நெய், நல்லெண்ணெய் போன்றவை) மேற்கொள்ள வேண்டும். எண்ணெய் குளியலும், ஆழ்ந்த உறக்கமும் அவசியம். முக்கியமானதாக மனம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

கே: சரியான குளியல் முறை யாது? தண்ணீரை தலையிலிருந்து காலுக்கா? (அ) காலில் இருந்தது தலைக்கு ஊற்ற வேண்டுமா?

ப: குளியல் முறை என்பது அவரவர் வசதியைப் பொருத்தது. எப்படிக் குளித்தாலும், உடம்பு தனது வெப்பத்தை வெளியேற்றிவிடும்.

கே: ஒவ்வாமையைப் பற்றி – மரபு வாழ்வியல் முறையில்  விளக்கவும்.

ப: ஒவ்வாமை என்பது மனித இயல்பு. அது குற்றமோ, குறையோ அல்ல. ஐம்புலன்களால் உணரக்கூடிய எல்லாவற்றிலும் மனிதர்களுக்கு ஏதாவது ஒரு ஒவ்வாமை இருக்கக்கூடும். உதாரணமாக, கேமராவின் ஃபிளாஷ் லைட் (கண்), கவுச்சி நாற்றம் (நாசி), தகரத்தில் ஆணியால் கீறும் சத்தம் (செவி), மாங்காய் புளிப்பு (நா), விலங்குகள் அல்லது பூச்சிகளின் எச்சில் (உடல்) போன்றவை பெரும்பாலானோருக்கு உள்ள ஒவ்வாமைகள். ஃபுட் அலர்ஜி என்று சொல்லப்படும் உணவு ஒவ்வாமை என்பது பெரும்பாலும் கெட்டுப் போன அல்லது தீமை செய்யும் நுண்ணுயிரிகள் பெருகிய உணவுகளை உட்கொள்ளுதல் ஆகும்.

மனம்

கே: எனக்கு வயது 30 ஆகிறது. திருமணம் ஆகவில்லை. எனக்கு கடந்த 10 வருடங்களாக இதயத்தில் வலி உள்ளது. எப்போதும் பதற்றமாக உள்ளது. ஏதோவொன்றை தீவிரமாக செய்ய முற்படுவேன். ஆனால் கவனம் ‌‌‌செலுத்த இயலவில்லை. தூக்கம் சரிவர இல்லை. செரிமான தொந்தரவு உள்ளது. பசி எடுக்கிறது, சாப்பிட்டால் வயிற்றில் காற்று பிடித்தது போல் தெரிகிறது. சிலசமயம் தள்ளாட்டமாக உள்ளது. ஒருசில நாட்கள் தீவிரமான காம உணர்ச்சி தோன்றுகிறது. பிறகு அது மறைந்துவிடுகிறது. எப்போதும் ஏதோ ஒன்றை இழந்தது போல் மனம் உள்ளது. மேலும் உடல் எப்போதும் சூடு பிடிக்கிறது.

ப: நீங்கள் சொன்ன அனைத்து தொந்தரவுகளுக்கும் மனமே காரணம். உங்களின் மனம் அமைதியில் ஆழ்ந்திருக்க வேண்டும். அப்படி நடந்தால், கொஞ்சம் கொஞ்சமாக உங்களின் அனைத்து தொந்தரவுகளும் சரியாகிவிடும். தினமும் இரவில் தூங்கச் செல்லும் முன், சில நிமிடங்கள் கண்களை முடி அமர்ந்திருங்கள். வருகின்ற அனைத்து எண்ணங்களையும் அனுமதியுங்கள். எண்ணங்களின் ஊர்வலம் முடிந்தபிறகு தூக்கம் வந்துவிடும். தூங்கிவிடுங்கள். இதனை ஒரு பயிற்சியாக ஒரு மாதத்திற்குச் செய்யுங்கள். மேலும், காம உணர்வை அடக்கி வைக்க வேண்டியதில்லை. அதனை உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு நியாயமான வகையில் தீர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

உணவு முறை

கே: உணவுப் பொருட்களில் (திட உணவு, திரவ உணவுகள், தானியங்கள், அரிசி உணவுகள்) சூடு மற்றும் குளிர்ச்சி என்று எவ்வாறு வகைப்படுத்துவது? நமது மரபுப்படி, எந்த பண்பை வைத்து புரிந்து கொள்வது?

ப: உணவுப் பொருட்களின் சுவைகளை கவனியுங்கள். பொதுவாக காரம், புளிப்பு ஆகியவை வெப்பத்தைக் கூட்டக்கூடியவை. இனிப்பு, கசப்பு ஆகியவை குளிர்ச்சியை தரக்கூடியவை. இவற்றில் அரிதாக ஒரு சில மட்டும் விதிவிலக்கானவை. இதைக் கொண்டும் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் யோசனை வேண்டாம். உங்களின் உடம்பே உங்களுக்கான ஆசிரியர். ஒவ்வொரு உணவுப் பொருளையும் உட்கொண்ட பிறகு, உடம்பில் ஏற்படும் மாற்றங்களை ஆழ்ந்து உணரத் தொடங்குங்கள். உங்களின் உடம்பு உங்களுக்கு பாடம் நடத்தும்.

கே: வெள்ளைச் சர்க்கரை, மைதா மாவு ஆகியவை உண்மையிலேயே தீங்கு செய்யக்கூடியதா? அவற்றை கண்டிப்பாகத் தவிர்க்கத் தான் வேண்டுமா? இவற்றையெல்லாம் தொடர்ச்சியாக சாப்பிடும் (இயற்கை விளைபொருட்களையே சாப்பிடாத) எளிய மனிதர்கள் பெரும்பாலும் உடல் வலிமையுடன் இருக்கிறார்களே? இது எதனால்? இது முற்றிலும் புதிராக இருக்கிறதே?

ப: கலப்படம் செய்யப்படாத உணவுப் பொருள் என்று ஒன்று கிடையாது. ஒரு விவசாயி இரசாயன உரம் எதுவும் போடாமல், ஓர் இயற்கை விளைபொருளை விளைவிக்கிறார் என்றால், அவருடைய மனசாட்சியின்படி அவர் இயற்கை விவசாயம் செய்திருக்கிறார். ஆனால், அவருடைய வயலுக்கு சில கிலோ மீட்டர்கள் தள்ளியிருக்கும் ஒரு விவசாயி இரசாயன உரத்தைப் பயன்படுத்தினால், அது காற்றில் பரவி, நம்முடைய இயற்கை விவசாயியின் பயிருக்கும் காற்றின் மூலம் கடத்தப்பட்டிருக்கலாம். இவை தவிர மனிதர்கள் தெரிந்தே செய்யக்கூடிய கலப்படங்கள் ஏராளம். கலப்படமற்ற பொருட்களையும், இயற்கை விளைபொருட்களையும் பயன்படுத்த வேண்டும் என்று சொல்வது உடல்நலத்திற்காக மட்டுமல்ல, அறச் சிந்தனைக்காகவும் தான். ஒரு விவசாயியோ அல்லது வியாபாரியோ, இந்த மண்ணுக்கும் மனிதர்களுக்கும் தீங்கு செய்ய மாட்டேன் என்று முடிவெடுக்கிறார் என்றால், நாம் அவரை ஆதரிக்க வேண்டும் என்பதற்காகவும் தான். வெறும் உடல்நலத்திற்காக மட்டும் இயற்கை விளைபொருட்களை வாங்குவோம் என்றால் அதன் பேர் சுயநலம்.

வெள்ளைச் சர்க்கரை, மைதா போன்றவற்றை உணவில் தாராளமாகப் பயன்படுத்தலாம். அவற்றால் சில கெடுதல்கள் உண்டு. அந்தக் கெடுதல்களையும், அதைச் சரிசெய்து கொள்வதற்கான வழிமுறைகளையும் தெரிந்துகொண்டு உட்கொள்ள வேண்டும்.

நீங்கள் குறிப்பிடும் எளிய மனிதர்கள் சிறுவயது முதலே உழைத்துப் பழகியவர்கள். அவர்களின் உடல் வெயில், மழை, குளிர் என அனைத்திலும் தாங்கி நின்று தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கின்றன. எனவே தான் அவர்கள் உடலளவில் வலுவானவர்களாகவும், நலமானவர்களாகவும் இருக்கிறார்கள்.

இயற்கை

கே: உயிர் காற்று தரும் மரங்கள் மற்றும் செடிவகைகள் யாவை ?

ப: அனைத்து வகை மரங்களும், செடிவகைகளும் உயிர்க் காற்றைத் தருபவைதான். மர வகைகளில் வேம்பு, ஆல், அரசு ஆகியவை சிறந்தவை. செடி வகைகளில் துளசி, செம்பருத்தி, குப்பைமேனி சிறந்தவை.

கே: வெப்பத்தைப் பெருக்கக்கூடிய மாம்பழங்கள், பலாப்பழங்கள் ஆகியவை கோடைக் காலத்தில்தான் பெருமளவில் காய்க்கின்றன. முக்கனிகளில் அடங்கும் இவையிரண்டும் ஏன் கோடைக்காலத்தில் விளைகின்றன?

ப: பழங்களை மட்டுமே பலனாகக் கொண்டு மரங்களைப் பார்ப்பதன் விளைவாக இக்கேள்வி எழுந்திருக்கிறது என்று நினைக்கலாம். மனிதர்களுக்குப் பழங்களைத் தருவதைத் தவிர வேறு பல பணிகளையும் மரங்கள் செய்கின்றன. பொதுவாக மா, பலா ஆகியவை குளிர்ச்சித் தன்மை கொண்ட மரங்கள். இவையிரண்டும் இருக்கும் இடங்களில் நீர் வளமும், குளிர்ச்சியும் இருக்கும். கோடைக்காலங்களில் பறவைகளின் ஆகச்சிறந்த உறைவிடமாக இம்மரங்கள் இருப்பதுண்டு. பழங்கள் என்பவை கூடுதல்தான். அவற்றில் வெப்பம் மிகுந்திருப்பதும் ஒருவகையில் இயற்கையின் அற்புதங்கள். மா, பலா ஆகியவற்றைத் தவிர்ப்பது பிழை. விரும்பியவரையில் சாப்பிடுவதே முறை.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு